articles

img

உலகைச் சுற்றி... - ஆர்.சிங்காரவேலு

உலகைச்  சுற்றி...

டோகோ: வம்சாவளி ஆட்சிக்கெதிரான மக்கள் போராட்டம்

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள  சிறிய நாடான டோகோவில் 58 ஆண்டுகளாக ஞாசிங்பே குடும்பமே ஆட்சியில் உள்ளது. 1967-ல் ஜனாதிபதி யாகப் பொறுப்பேற்ற ஞாசிங்பே இயடெமா 38 ஆண்டுகள் அப்பொறுப்பில் நீடித்தார். 2005-ல் இருந்து கடந்த 20 ஆண்டுகளாக அவரது மகன் பாவ்ரே ஞாசிங்பே ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.  ஜனநாயகத்தை மேலும் பலவீனப்படுத்தும் நடவடிக்கை  2024-ல் தேசிய நாடாளுமன்றம் நாட்டின் அரசியலமைப்பை அடிப்படையிலேயே மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசியல் சட்டத்தை நிறைவேற்றியது. இந்த மாற்றங்கள்: ஜனாதிபதித் தேர்தல் முறையின் மாற்றம்: நேரடி வெகுஜன வாக்கெடுப்பு கைவிடப்பட்டு, நாடாளுமன்ற ஆட்சிமுறை ஸ்தாபிக்கப்படுகிறது.  அமைச்சர்கள் கவுன்சில் தலைவர்: முழு நிர்வாக, சிவில் மற்றும் ராணுவ அதிகாரம் படைத்த இந்தப் பதவி அரசின் உண்மையான தலைமைப் பொறுப்பாக மாறுகிறது.  தேர்தல் முறை: இத்தலைவரை நாடாளு மன்றமே தேர்ந்தெடுக்கும், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்.  பதவிக்காலம்: 6 ஆண்டுகள், காலவரையின்றிப் புதுப்பிக்கவும் முடியும்.  ஜனாதிபதி பதவி: 5 ஆண்டுக்குப் பதிலாக 6 ஆண்டு, ஒரு முறை மட்டும் பொறுப்பேற்க முடியும். ஆனால் தற்போது உள்ள ஜனாதிபதியின் 20 ஆண்டுகால ஆட்சி கணக்கில் கொள்ளப்படாது.  மக்கள் எழுச்சி  ஜூன் 26 முதல் ஆயிரக்கணக்கான டோகோ மக்கள் தலைநகரம் லோமே மற்றும் இதர மாநகரங்களில் ஜனாதிபதியின் ராஜினாமாவைக் கோரியும், விலைவாசி உயர்வைக் கண்டித்தும் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர்.   அரசின் அடக்கு முறையால் இதுவரை ஏழுபேர் இறந்துள்ளனர், பலர் காயமுற்றுள்ளனர். காவல்துறை கண்ணீர்ப்புகை வீசுதல், தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற  அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.  58 ஆண்டுகால குடும்ப ஆட்சியால் சாதாரண மக்களிடையேயும் சிவில் சமூகக் குழுக்களிடையேயும் கடும் விரக்தி ஏற்பட்டுள்ளது என்பது இப்போராட்டங்களில் தெளிவாகத் தெரிகிறது.