மெக்சிகன் போதை மருந்து கும்பல் தேசத்திற்கே பேராபத்து!
உலகின் மிக ஆபத்தான போதைப் பொருள் கடத்தல் கும்பலாக அறியப் படும் கார்டெல் ஜலிஸ்கோ நுவேவா ஜெனரேசியோன் (Cartel Jalisco Nueva Generación - CJNG) இந்தியாவில் நேரடியாக நுழைந்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 8 ஜூன் 2025 அன்று இந்தியாவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி யில் போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகங்களுக்கு நேரடியாக நிதியுதவி அளித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிஜேஎன்ஜி (CJNG) கும்பல் அமெரிக்க இராணு வத்திடமே கூட இல்லாத அதிநவீன ஆயுதங்களை வைத்திருக்கும் அமைப்பு என கருதப்படுகிறது. இந்தக் கும்பல் ஃபென்டானில் (fentanyl), மெத்தம்பேட்டமைன் (methamphetamine), கோகைன் (cocaine), ஹெராயின் (heroin) போன்ற போதைப்பொருட்களைக் கடத்துவதோடு, தங்களுக்குத் தடையாக இருப்பவர்களைக் கொடூரமாகக் கொலை செய்யும் வன்முறை அமைப்பு என்று அமெரிக்க அரசு கூறுகிறது.
அமெரிக்கா அறிவித்த பரிசுத் தொகை
18 ஜூன் 2025 அன்று அமெரிக்காவின் வெளியுற வுத்துறை (Department of State) சிஜேஎன்ஜி (CJNG) அமைப்பின் தலைவர்களை உலகளாவிய பயங்கரவாதிகள் என அறிவித்துள்ளது. இந்தக் கும்பல் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு 15 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 120 கோடி ரூபாய்) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் கண்டுபிடிப்பு
கடந்த 25 அக்டோபர் 2024 அன்று உத்தரப்பிர தேசத்தின் கெளதம் புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா (Greater Noida) காசனாப் பகுதியில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவு (Delhi Special Cell) அதிகாரிகள் கூட்டு நட வடிக்கை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையில் ரகசியமாக இயங்கிய மெத்தம்பேட்டமைன் (methamphetamine) உற்பத்தி ஆய்வகம் அம்பலப்பட்டது. 95 கிலோ மெத்தம்பேட்டமைன் (methamphetamine) மற்றும் நவீன உற்பத்தி இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆய்வகத்தில் மெக்சிகோ நாட்டவர், மும்பையைச் சேர்ந்த வேதியியலாளர், தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் திகார் சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களில் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த குடீர்ரெஸ் லுகோ குஸ்டாவோ (Gutierrez Lugo Gustavo), தில்லியைச் சேர்ந்த அமித் குமார் சிங், திகார் சிறை வார்டன் நவீன்மன், ரவீந்திர ஜனார்தன், அம்ரிஷ் பூரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஒரு கிலோ மெத்தம்பேட்டமைன் (methamphetamine) சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய். எனவே பறிமுதல் செய்யப்பட்ட 95 கிலோ மெத்தம்பேட்டமைன் (methamphetamine) மதிப்பு 285 கோடி ரூபாய்.
இந்தியாவில் நுழைந்த விதம்
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக (NCB) அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சிஜேஎன்ஜி (CJNG) கும்பல் மறைமுக நாணயம் (cryptocurrency) மூலம் துபாய்க்குப் பணம் அனுப்பிய பிறகு, அந்தப் பணம் ஹவாலா மூலம் தில்லியில் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக, உற்பத்தி செய்யப்பட்ட மெத்தம்பேட்டமைன் (methamphetamine) தரத்தைச் சோதிப்பதற்காக சிஜேஎன்ஜி (CJNG) கும்பலைச் சேர்ந்த ஒரு நபரை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.
அமித் குமார் சிங் : முக்கிய குற்றவாளி
இந்த வழக்கில் முக்கிய பங்கு வகித்த தில்லி தொழிலதிபர் அமித் குமார் சிங்கிற்கு சொந்தமான 9.20 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) முடக்கியுள்ளது. அமித் குமார் சிங் ஸ்கில்லா டெய்ரி இந்தியா லிமிடெட் (SCILLA DAIRY INDIA LIMITED), ஸ்கில்லா பயோடெக்னாலஜிஸ் லிமிடெட் (SCILLA BIOTECHNOLOGIES LIMITED), ஸ்கில்லா இன்ஃப்ராடெக் லிமிடெட் (SCILLA INFRATECH LIMITED), கோ ஹெரிடேஜ் இந்தியா ஜர்னிஸ் பிரைவேட் லிமிடெட் (GO HERITAGE INDIA JOURNEYS PRIVATE LIMITED), பிவிஎம் ஃபார்மா லிமிடெட் (BVM PHARMA LIMITED) ஆகிய நிறுவனங்களின் இயக்குநர்.
கடந்த கால குற்ற வரலாறு
17 ஏப்ரல் 2013 அன்று வருவாய் புலனாய்வுத் துறை (Directorate of Revenue Intelligence - DRI) பதிவு செய்த வழக்கில், தில்லியில் டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) வாகனத்தில் இருந்து 951 கிலோ மெத்தக்வாலோன் (Methaqualone) என்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வாகனம் ஸ்கில்லா பயோடெக்னாலஜிஸ் லிமிடெட் (SCILLA BIOTECHNOLOGIES LIMITED) நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2014ம் ஆண்டு அமித் குமார் சிங் கைது செய்யப் பட்டு, கிட்டத்தட்ட 3 ஆண்டு 4 மாதங்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 2018ம் ஆண்டு இடைக்கால ஜாமீனில் வெளிவந்த அவர், 6 ஆகஸ்ட் 2024 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து முறையான ஜாமீன் பெற்றார். அதன் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் பாரபட்ச நடவடிக்கை
வழக்கமாக கைது செய்யப்பட்ட நபர்களின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிடும் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) இந்த வழக்கில் மட்டும் எந்தத் தகவலையும் வெளியிட வில்லை. 2024 பிப்ரவரி 15 அன்று தில்லியில் 50 கிலோ சூடோஇபெட்ரின் (pseudoephedrine) பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டபோது, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக (NCB) தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி அளித்தது. அரசியல் பின்னணி கொண்ட இத்தகைய நபர்களை வெளிப்படுத்தும் போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB), மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை மறைப்பது ஏன் என்று கேள்வி எழுகிறது.
தேசிய குற்ற ஆவணக்காப்பக அறிக்கையில் மோசடி
தேசிய குற்ற ஆவணக்காப்பகம் (NCRB) 2018, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் போதைப்பொருள் பறிமுதல் தொடர்பான தரவுகளை சத்தமில்லாமல் திருத்தியுள்ளது. 2018ம் ஆண்டு 22,263 கிலோ ஹெராயின் (heroin) பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியிட்ட அறிக்கையை 7,263 கிலோ மட்டுமே என்று திருத்தியுள்ளது. 2020ல் 55,804 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவித்தபின், அதை 2,626 கிலோ மட்டுமே என்று மாற்றியுள்ளது. 2021ம் ஆண்டு 68,219 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி, பின்னர் 3,578 கிலோ மட்டுமே என்று திருத்தி யுள்ளது. மூன்று ஆண்டுகளில் மறைக்கப்பட்ட 1,32,819 கிலோ ஹெராயின் சர்வதேச சந்தை மதிப்பு 9.29 லட்சம் கோடி ரூபாய். இத்தனை பெரிய தொகைக்கு சமமான போதைப்பொருள் எங்கே போனது என்பது தெரியவில்லை. உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் கும்பல் இந்தியாவிற்குள் நுழைந்திருக்கும் நிலையில், உள்துறை அமைச்சகம் அரசியல் ஆதாயத்திற்காக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB) போன்ற முக்கிய அமலாக்க ஏஜென்சிகளைப் பயன்படுத்துவதில் அக்கறை காட்டுகிறது. எதிர்க்கட்சியினர் சம்பந்தப்பட்ட வழக்கு களில் மட்டும் விரிவான பத்திரிகை வெளியீடுகள் செய்யும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணி யகம் (NCB), நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள மெக்சிகன் போதைப்பொருள் கடத்தல் கும்பல் விவகாரத்தில் மெளனம் காக்கிறது. போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தீவிரம் காட்டாவிட்டால், இளைய தலைமுறையின் எதிர்காலம் மட்டுமல்ல, நாட்டிற்கே பேராபத்து காத்திருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா அரசியல் ஆதாயத்திற்காக காட்டும் அக்கறையில் கொஞ்சமாவது நாட்டின் பாதுகாப்பிலும் காட்டுவாரா என்பது தான் கேள்வி.