states

img

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் அஞ்சலி

இராமநாதபுரம், அக். 30 -  பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 117-ஆவது பிறந்த நாள் மற்றும் நினைவு தினத்தை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தேவரின் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் நேரில் மரியாதை செலுத்தினார். தமிழக அமைச்சர்கள் பி. மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேவருக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று புகழாரம் சூட்டினார்.  மேலும், தேவரின் பெயரில் மேலநீலிதநல்லூர் - கமுதி - உசிலம்பட்டி ஆகிய இடங்களில் மூன்று அரசு கலைக் கல்லூரிகள், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு ஒதுக்கீடு ஆகியவை திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். முன்னதாக, பசும்பொன் செல்லும் வழியில் மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் சிலைக்கும், தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் உருவச் சிலைகளுக்கும் மாலை அணிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.