புதுக்கோட்டை ஜன.16- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில் அலஞ்சிரங்காடு அணியினர் தொடர் வெற்றியை பெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் திருவள்ளுவர் மன்றம் பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொங்கல் விளையாட்டு விழா மற்றும் கலை இலக்கிய போட்டிகளை வியாழக்கிழமை நடத்தினர். காலை முதல் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மற்றும் இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாலையில் உயரமான வழுக்கு மரத்தில் ஏறும் போட்டியும் நடந்தது. பல அணிகள் நீண்ட நேரம் முயற்சித்து வழுக்குமரம் ஏறினார்கள். இறுதியில் அலஞ்சிரங்காடு அணியினர் வழுக்கு மரத்தின் மேலே உள்ள இலக்கை தொட்டு வெற்றி பெற்றனர். வெற்றிபெற்ற அணிக்கு பரிசுகள் மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது. இதே அணியினர் கடந்த 3 ஆண்டுகளாக இதே வழுக்கு மரத்தில் ஏறி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக தொடர் வெற்றி பெற்றுள்ளதற்காக அப்பகுதியில் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்டனர். இந்நிகழ்ச்சிகளை காண ஏராளமானோர் வந்திருந்தனர்.