districts

img

உய்யங்கொண்டான் வாய்க்கால்களில் தண்ணீர் விடுவதை ஒரு மாத காலம் நீடிக்க வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி, ஜன.23-  தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி புறநகர் மாவட்டக்குழுக் கூட்டம் திருச்சியில் புதனன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் சிதம்பரம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநிலத்துணைத் தலைவர் கே. முகமதுதலி சிறப்புரையாற்றினார். கடந்தகால நடவடிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர் நடராஜன் பேசினார்.  கூட்டத்தில், திருவெறும்பூர் மற்றும் தஞ்சை மாவட்ட பகுதி சாகுபடிக்கு உய்யக்கொண்டான் மற்றும் கட்டளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் வருகிறது. எனவே, வரும் 28 ஆம் தேதி முதல், உய்யங்கொண்டான் மற்றும் வாய்க்கால்களில் வரும் தண்ணீரை நிறுத்துவதை பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி வரை நீடித்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக திருவெறும்பூர், லால்குடி, மணச்சநல்லூர், துறையூர், உப்பிலியபுரம், புள்ளம்பாடி பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வெங்காயம் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.  டிராக்டர் பேரணி  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், வரும் 26 ஆம் தேதி ரெட்டை வாய்க்கால் முதல், சோமரம் பேட்டை வரை நடைபெறும் டிராக்டர் பேரணியை வெற்றிகரமாக நடத்துவது, விவசாயிகள் பயிரிடும் தானியங்களை வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் சேகர், முருகேசன், குருநாதன், ஜெகதீஸ்வரன், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.