மயிலாடுதுறை, ஜன.16- திருவிளையாட்டம் கிராமத்தில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை மீட்டெடுப்போம் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாபெரும் சுடர் ஓட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், 29 ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா-கலைநிகழ்ச்சி வியாழனன்று சங்கத்தின் கிளைத்தலைவர் என்.அறிவரசன் தலைமையில் நடைபெற்றது. கிளை பொருளாளர் எம்.ராஜேஷ்கண்ணா வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து திருவிளையாட்டம் சிவன்கோவில் எதிரே “காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை மீட்டெடுப்போம்” என வலியுறுத்தி மாபெரும் சுடர் ஓட்டத்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், சமூக ஆர்வலர் முஜிபுல் ரஹ்மான், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் என்.சந்திரமோகன் ஆகியோர் துவக்கி வைத்து வீரர்களிடம் சுடரை எடுத்துக்கொடுத்தனர். 2 ஆயிரம் மரக்கன்றுகள் செம்பனார்கோவில் புவிகாப்பு இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட 2 ஆயிரம் மரக்கன்றுகளை வீடுகள் தோறும் விழிப்புணர்வு முழக்கங்களுடன் வழங்கினர். மெயின்ரோடு, அரும்பாக்கம், குப்புரான்தோப்பு, ஆற்றங்கரை வழியாக விழா நடைபெற்ற மைதானத்திற்கு வந்தடைந்தனர். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த சுடரை, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா பெற்றுக்கொண்டு, சுடர் பயணத்தில் பங்கேற்ற கிஷோர், வசீகரன், தீபிகா, முகேஷ் ஆகியோரை வாழ்த்தி பாராட்டினார். தொடர்ந்து சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள், நடனம், பாட்டு, கவிதைப்போட்டிகள் நடைப்பெற்றன. மாலை நடைபெற்ற கலைநிகழ்ச்சிக்கு முன்னதாக, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.அறிவழகன், மாவட்டத் தலைவர் ஐயப்பன், ஒன்றியச் செயலாளர் பவுல் சத்தியராஜ், ஒன்றியத் தலைவர் கார்த்திகேசன், ஒன்றிய துணைத்தலைவர் கோஸ்மீன், ஒன்றியப் பொருளாளர் ராமச்சந்திரன், விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் வீ. குணாளன், சிபிஎம் கிளைச் செயலாளர் தீபன்கோஷ் உள்ளிட்டோர் உரையாற்றினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். நிறைவாக கிளைச் செயலாளர் ஜோன் சத்திய சீலன் நன்றி கூறினார்.