திருவாரூர், ஜூன் 23 - தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பல அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் வருகை தரும் பொதுமக்கள் முகக் கவசம் அணியாமலும் அல்லது முகக் கவசத்தை முறையாக அணியாமலும் உள்ளனர். சமீப காலமாக இளையோர், பள்ளி செல்லும் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் தங்கி பயில்வோர் கொரோனா தொற்றால் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றனர். துரதிஷ்டவசமாக பெற்றோர்கள் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் முறையான பரிசோதனை செய்யாமல், சாதாரண சளி தொந்தரவுதான் என கருதுகின்றனர். குழந்தைகள் சேர்ந்து விளையாடும் போது மற்ற குழந்தைகளுக்கும், சமூகத்திற்கும் எளிதில் நோய் தொற்றை பரவவிடும். எனவே கல்வி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள், பெற்றோர் மற்றும் குழந்தைகள் யாருக்கேனும் சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்வது மற்றும் ஓய்வு எடுப்பது போன்றவைகளை பின்பற்றிட வேண்டும். மேலும் நோய்த்தொற்று பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் போன்ற பழக்கங்களை தொடர்ந்து கடைபிடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.