districts

அதிகாரிகள் அலட்சியம்: மூடப்படும் பால் கூட்டுறவு சங்கங்கள்

திருவண்ணாமலை, மார்ச் 28- திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக கிராமப்பகுதிகளில் செயல்பட்டு வந்த கூட்டுறவு பால் சங்கங்கள் மூடப்பட்டு வருவதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்ட பால்வளத் துறை துணைப்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் சரக முதுநிலை ஆய்வாளர் மீனாட்சி, தண்டராம்பட்டு சரகத்தில் பணிபுரியும் முதுநிலை ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர், அவர்கள் பணியாற்றும் சரகங்களில் உள்ள  பால் கூட்டுறவு சங்கங்களில் முறையாக ஆய்வு செய்யாமல்,  ஆய்வு என்ற பெயரில் சங்க பணியார்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவர்கள் சங்கங்களை மூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் வழங்காத  காரணத்தால், சேகரித்து வந்த பால், தனியார் பண்ணைக்கு சென்றுள்ளது. இவர்களின் அலட்சியப் போக்கு குறித்து, கடந்த 1 வருடகாலமாக ஆணையாளரிடம் புகார் கூறியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் மீது நடவக்கை எடுக்காததால் தினசரி சுமார் 5000 லிட்டர் பால் வரத்து குறைந்துள்ளது. இவர்களின் அலட்சியத்தால், ஏந்தல் மகளிர், மலப்பாம்பாடி, நாறையூர் சே.ஆண்டாப்பட்டு, ராதாபுரம் மகளிர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பால் சேகரிப்பு சங்கங்கள் மூடப்பட்டு, அங்கெல்லாம் தனியாருக்கு பால் வழங்கப்படுகிறது. எனவே, அலட்சியபோக்கோடு செயல்பட்டு, பால் சங்கங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.