திருவண்ணாமலை, ஏப். 11- திருவண்ணாமலை மாவட்டம் பெரண மல்லூர் பேரூராட்சி சிறப்புக் கூட்டம் திங்களன்று (ஏப். 11) தலைவர் வேணி ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணா துரை முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் தமிழரசி வரவேற்றார். தமிழக அரசு அண்மையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியைத் திருத்தி தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பெரணமல்லூர் பேரூராட்சியில் சிறப்புக் கூட்டம் நடத்தி இப்பொருள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மா.கௌதம் முத்து சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் வரலாறு காணாத விலை உயர்வில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு மேலும் சுமையேற்றுவதை மறுபரிசீலனை செய்யுமாறும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.