சாம்சங் இந்தியா நிறுவனத் தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைப் போராட்டத்தை ஆதரித்து திருப்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமை ஏற்றார். இந்த போராட்டத்தில் சாம்சங் தொழிலாளர் போராட்டத்தின் நோக்கம் குறித்து சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி.சம்பத் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் செ.மணிகண்டன், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் கல்கி ராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தெற்கு ஒன்றியத் தலைவர் பா.லட்சுமி ஆகியோர் உரையாற்றினர்.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அ.பஞ்சலிங்கம் ஆகியோர் சாம்சங் தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றினர்.
இதில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், காவல்துறையை பயன்படுத்தி சாம்சங் தொழிலாளர்களையும், சிஐடியு தொழிற்சங்கத் தலைவர்களையும் கைது செய்யும் அடக்குமுறை அராஜக நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.