districts

அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும் : கனிமொழி எம்.பி. பேச்சு

தூத்துக்குடி, டிச. 7 அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கனிமொழி எம்பி  பேசினார். தூத்துக்குடியில் அம்பேத்கர் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையற்கான நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு ஆட்சியர் இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பென்னட் ஆசீர் வரவேற்புரையாற்றினார். விழாவில், வீட்டு மனைப்பட்டா, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, தாட்கோ லோன், உள்ளிட்ட 8 துறைகளின் சார்பில் 370 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 86 இலட்சத்து 20 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

 விழாவில் அவர் பேசுகையில்: தமிழக முதலமைச்சர் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் தமிழகம் முழுவதும் வழங்க வேண்டும் என்று கூறியது மட்டுமின்றி முதலமைச்சரே தொடங்கி வைத்து அந்த திட்டத்தை நாம் இங்கு வழங்கி வருகிறோம். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்து நிலையிலும் எல்லோரும் சமமாக வாழ்ந்து வளர வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நோக்கம். ஆனால் சில அரசியல் கட்சிகள் பிரித்து பார்க்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். இணைக்கும் முயற்சியை எடுத்து ஒற்றுமையாக வாழ்வதற்கு வழிவகை ஏற்படுத்திய பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் அம்பேத்கர் வாழ்நாளை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு வாழ வேண்டும். ஜாதி, மதம் பிளவு இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை அனைவரும் பேணி பாதுகாக்க வேண்டும் என்றார்.    விழாவில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பேசினார்கள்.

விழாவில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் உமரி சங்கர், துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர் அன்னலெட்சுமி, கவுன்சிலர் விஜயலெட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட அரசு துறை அலுவலர்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர். தாட்கோ மாவட்ட மேலாளர் ஜெனிஷிஸ்.ம.ஷியா நன்றியுரையாற்றினார்.