கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறியாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது முழு ஆதரவை அளித்துள்ளது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசைத்தறியாளர்களை செவ்வாயன்று நேரில் சந்தித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
கருமத்தம்பட்டியில் அமைக்கப்பட்ட உண்ணாவிரதப் பந்தலில் விசைத்தறியாளர்கள் மத்தியில் உரையாற்றிய பத்மநாபன், “விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக உள்ளது. உங்களது உரிமைகளுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் துணைநிற்கும்,” என்று உறுதியளித்தார்.
விசைத்தறியாளர்கள் தங்களது தொழிலில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர். குறிப்பாக, மூலப்பொருட்களின் விலையேற்றம், போதிய கூலி உயர்வின்மை, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதற்கு ஆதரவாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரின் வருகை, விசைத்தறியாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள், “எங்களது கோரிக்கைகளுக்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும். இல்லையெனில், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம்,” என்று தெரிவித்தனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு, இப்போராட்டத்திற்கு கூடுதல் வலிமையை அளித்துள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், இப்பிரச்சினை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை முன்னெடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருப்பதாக பத்மநாபன் தெரிவித்தார்.