கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுத்து, இழிவாக பேசுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டியலின மக்கள் புகாரளித்தனர்.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி, தாசநாயக்கன்பட்டி, சின்னையாபுரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அனைத்து சமூக மக்களும் வழிபாடு நடத்த கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் ஸ்ரீராஜ மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட அனுமதி மறுத்து, தொடர்ந்து ஆதிக்க சமூகத்தினர் பிரச்சனை செய்வது தொடர்கதையாகி வந்துள்ளது. இதனால், மனமுடைந்த பட்டியலின மக்கள் செவ்வாயன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், நாங்கள் மேளம் அடிக்கும் தொழில் செய்து வருகிறோம். இதனால் எங்கள் பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக, இதேபகுதியைச் சேர்ந்த தனபால், மோகன், சரவணன், பாலமுருகன் ஆகியோர் தொடர்ந்து சாதி ரீதியாக ஆபாச வார்த்தைகளில் பேசி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட கோவிலில் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், சாதி ரீதியாக இழிவாக பேசும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.