கோவை சரவணம்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 4 முதல் 8 -ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் ஆய்வகம் மற்றும் அனைத்து வகுப்பறைகளிலும் மினி நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
கோவை சரவணம்பட்டி, ஷாஜகான் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை சுமார் 700 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன்களை மேம்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் தனியார் பங்களிப்புடன் பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக பள்ளியில் உள்ள அனைத்து வகுப்புகளுக்கு தொலைக்காட்சி, இணைய வசதி, உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி தனியார் பங்களிப்போடு புதிய அறிவியல் ஆய்வகத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் 4 -ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று வரும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாட புத்தகத்தில் படிக்கும் அறிவியல் பாடம் தொடர்பான விசங்களை எளிமையாக ஆசிரியர்கள் விளக்கும் வகையில் இந்த அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வகத்தில் பெரிய எல்.இ.டி திரையும், அண்ட வெளி படங்கள், மைக்ரோஸ்கோப், இருதயம், சிறுசீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் குறித்தான தெளிவாக குழந்தைகள் கற்றறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்திற்கு மாணவர்களையும் கவர்ந்துள்ளது. அதே போல பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் தனியார் பங்களிப்புடன் மினி நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அந்தந்த வகுப்பு குழந்தைகளுக்கு ஏற்ற கதை புத்தகங்கள், உள்ளிட்ட தமிழ், ஆங்கிலம் மொழிகளில் பல்வேறு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கோவை மாநகராட்சி சார்பாக, மாநகராட்சி பள்ளிகளில் நமக்கு நாமே மற்றும் தனியார் சிஎஸ்ஆர்நிதி மூலம் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் "விர்ச்சுவல் ரியாலிட்டி" வகுப்பறை திறக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் கூறும் போது :
தற்போதைய அரசு பொருப்பேற்றது முதல் பள்ளிக்கல்விக்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டுமே இந்த மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு மாணவர்கள் கற்றல் திறனை அதிகரிக்க தேவையான பணிகளை மாநகராட்சி சார்பில் செய்துள்ளோம். புதிதாக அறிவியல் ஆய்வகம் அனைத்து வகுப்பறைக்கு மினி நூலகம் போன்ற சேவைகளையும் துவங்கியுள்ளோம்,. மேலும் இப்பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் கடந்த 2 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தி வரும் கலை திருவிழாவில் பங்கேற்று கலை இளவரசி விருதுகளையும் பெற்றுள்ளனர். மேலும் மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கான வசதிகள், மற்றும் செயல் திறன்களை கண்டு, இப்போது மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 400 ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 700 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் சேர்க்கைக்காக வீடு வீடாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் தான் என தெரிவித்தார்.