districts

img

பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் ஊழல் புகார்: கடமலை-மயிலை ஒன்றியக்குழு தலைவரை பதவி நீக்கம் செய்திடுக

கடமலைக்குண்டு, ஜுன்.10- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் மொத்தம் 14 வார்டுகள் உள்ளது. கடமலை-மயிலை ஒன்றிய குழுத்தலைவராக அதிமுகவை சேர்ந்த சந்திரா சந்தோசம் பதவி வகித்து வருகிறார்.  இவர் கடந்த கொரோனா ஊரடங்கு காலகட்டத்தின் போது கிராமங்களில் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிளீச்சிங் பவுடர் வாங்கியது உள்ளிட்டவற்றில் ஊழலில் ஈடுபட்டதாக 9 திமுக மற்றும் அதிமுக சார்பில் வெற்றி பெற்று  தற்போது திமுகவிற்கு ஆதரவளிக்கும் 2 கவுன்சிலர்கள் என மொத்தம் 11 பேர் ஒன்றியக்குழு தலைவர் மீது புகார் எழுப்பினர். மேலும் இந்த புகாரை முறையாக  விசாரணை செய்து அவரை பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என 11 கவுன்சிலர்கள் இணைந்து சென்னை ஊரக உள்ளாட்சி துறை தனிச்செயலாளருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான கூட்டம் வெள்ளிக்கிழமை காலையில் மயிலாடும்பாறை ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரியகுளம் கோட்டாட்சி யர் (பொறுப்பு) சாந்தி தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் ஆண்டிபட்டி தாசில்தார் திருமுருகன், கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் திருப்பதிமுத்து,  திருப்பதிவாசகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு தலைவர் மற்றும் திமுக, அதிமுகவை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஒன்றியக்குழு தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுப்பிய 11 கவுன்சிலர்களின் 10 பேர் மற்றும் அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர் என மொத்தம் 11 பேர்  நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு ஒன்றி யக்குழு தலைவர் அளித்திருந்த விளக்கத்தை கோட்டாட்சியர் எடுத்து ரைத்தார். ஆனால் ஒன்றியக்குழு தலைவரின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை எனக்கூறி கவுன்சிலர்கள் அனைவரும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஒருமனதாக பரிந்துரை செய்தனர்.  இதனை ஏற்காத அதிமுக கவுன்சிலர் முருகன் கூட்டத்தின் போது வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து பெரும்பான்மையான உறுப்பினர்கள்  ஆதரவளித்ததால் ஒன்றியக் குழு தலைவர் பதவி நீக்கம் தொடர்பான பரிந்துரையை ஏற்றுக்கொண்ட கோட்டாட்சியர் அதனை அடுத்த கட்ட  நடவடிக்கைக்காக அரசுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். இதனை யடுத்து கூட்டம் முடிவடைந்தது.