தஞ்சையில், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, வேலையிழந்த இளைஞர் ஒருவர் மன உளைச்சல் காரணமாக தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை மானோஜிப்பட்டி கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). இவர் கந்தர்வக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்திருக்கிறார். கொரோனா காலத்தில் பணியை இழந்த இவர் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்துள்ளார்.
இதனால் பலரிடம் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் சரியான வேலையும் இல்லாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி செந்தில்குமார் மானேஜிப்பட்டி தெற்கில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்து விட்டார்.
இதுகுறித்து அவரது மனைவி காயத்ரி (33) தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் உதவி ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.