தஞ்சாவூர், டிச.21 - தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில், ஒரத்தநாடு வட்டம் பாப்பநாடு எம்.எம்.ஏ மேல்நிலைப் பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவி கா.காவியா மாநில அளவில் மூன்றாம் இடமும், மாவட்ட அளவில் முதலிடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் நிகழாண்டு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு கடந்த அக்.19 அன்று நடைபெற்றது. இந்த தேர்வில் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்த்து முதல் 750 இடங்களில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.1,500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில், தமிழ்நாடு முழுவதும் சுமார் 2.35 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வு முடிவுகள் அரசின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் பாப்பநாடு எம்.எம்.ஏ மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி கா.காவியா 98 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாவது இடத்திலும், தஞ்சாவூர் மாவட்ட அளவில் முதலிடத்திலும் தேர்ச்சி பெற்றார்.
மாணவி கா.காவியா மற்றும் அவருக்கு பயிற்றுவித்த தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் மாணவி கா.காவியா மற்றும் அவரது பெற்றோருக்கு பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர் சா.சஞ்சய் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மாணவி கா.காவியாவிற்கு பயிற்சியளித்த முதுகலை தமிழாசிரியர் குருமூர்த்திக்கு பள்ளியின் இயக்குநர் குணசேகரன் சன்மானம் வழங்கி கௌரவித்தார்.