districts

விளிம்புநிலை மக்கள் 28 பேருக்கு வீடு கட்டும் ஆணை வழங்கல்

தஞ்சாவூர், நவ.5 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில், நரிக்குறவர் இன விளிம்பு நிலை மக்கள் 28 பேருக்கு வீடுகட்டும் ஆணையை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.  பேராவூரணி பேரூராட்சி செந்தமிழ் நகர் பகுதியில் குடியிருக்கும் நரிக்குறவர் இன மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் குடியிருக்க முடியாத நிலை, இரவு நேரங்களில் குடிசைகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் புகுந்து பல்வேறு சிரமங்களை அனுபவிப்பதால் கான்கிரீட் வீடு கட்டித் தர வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.  இதையடுத்து முதற்கட்டமாக ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில், வீடு கட்ட ரூ.2.10 லட்சத்திற்கான ஆணை 28 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வீடு கட்டும் ஆணையை வழங்கினார்.