தஞ்சாவூர், மார்ச்.17- கனடா நாட்டில் மேனிலைப்பள்ளிப் படிப்பு பயிலும் தமிழ் மாணவர்கள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்பில் சேர உதவும் வகையிலான சான்றிதழ் படிப்பு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் தமிழ் வளர்மையம் மூலமாக நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் கூறியதாவது, ‘‘தமிழ் வளர் மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கனடா தமிழ்க்கல்லூரியின் வழி, அந்நாட்டுத் தமிழர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்விப்படிப்புகளில் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கவுள்ளது. கனடா நாட்டில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்வதற்குத் தாய்மொழிக் கல்வி மதிப்பெண்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள கனடா நாடு அனுமதித்துள்ளது. இத்திட்டத்தை மையமாகக் கொண்டு, தமிழ் வளர் மையமும், கனடா தமிழ்க் கல்லூரியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. இதன்படி, பள்ளியிறுதி வகுப்பு பயிலும் கனடா தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் வளர் மையம் மூலம் திறமைநெறித் தேர்வுச் சான்றிதழ் படிப்பு (Tamil Credit course - Certificate) நடத்தப்படும்.
இணையவழியாகவும், கனடா மையம் மூலம் நேரடியாகவும் நடத்தப்படவுள்ள இந்தப்படிப்பில் ஓராண்டுக் காலப் பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் தமிழில் பேசும் கலை, எழுதும் கலை உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படவுள்ளன’’ என்றார். தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் முன்னிலையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தக் கையெழுத்திடும் நிகழ்வில், பதிவாளர் முனைவர் க.சங்கர், கனடா தமிழ்க்கல்லூரி முதல்வர் சிவாநந்தன், தமிழ் வளர் மைய இயக்குநர் (பொ) முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர்(பொ) முனைவர் சி.தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பண்பாட்டு மையமும், கனடா தமிழ்க்கல்லூரியும், தமிழ்ப்பண்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது. தமிழ் இசை, நாட்டியம் சார்ந்த எட்டுப் படிநிலைப்படிப்புகளில் பாடங்கள் நடத்தப்படவுள்ளன.