தஞ்சாவூர், மார்ச் 16 - மல்லிப்பட்டினம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தரப்படும் என்பன உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டினம் பகுதியில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக மார்ச் 18 (வெள்ளிக்கிழமை) மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் கணேஸ்வரன் தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், வட்ட வழங்கல் அலுவலர், மண்டல துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் சக்திவேல், வருவாய் ஆய்வாளர் தீபா, கிராம நிர்வாக அலுவலர் அருண்மொழி, மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர் அரசுத் தரப்பில் கலந்து கொண்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் ஜலீலா பேகம் முகமது அலி ஜின்னா, துணைத் தலைவர் மாசிலாமணி, மண்டப உரிமையாளர், சிபிஎம் முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் வீ.கருப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, பி.பெரியண்ணன், கிளைச் செயலாளர் வி.சுப்பிரமணியன், கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், “மல்லிப்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வரும் தனியார் திருமண மண்டபம் மூடப்படும்.
அடிக்கடி விபத்து நடக்கும் மல்லிப்பட்டினத்தில் அவசர சிகிச்சை அளித்திட ஏதுவாக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு முன்மொழிவு அனுப்பப்பட்டு தொடர் நடவடிக்கையில் உள்ளது. மல்லிப்பட்டினம் காலனி பகுதிக்கு பகுதிநேர அங்காடி அமைக்கவும், கே.ஆர்.காலனி, அம்பேத்கார் நகர், புதுமனைத் தெரு ஆகிய மூன்று தெருக்களும் பயன் பெறும் வகையில் பகுதிநேர அங்காடி விரைவில் அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், கஜா புயலால் சேதமடைந்த விசைப்படகு உரிமையாளர்கள் 7 பேருக்கு நிவாரணம் வழங்க மறுபரிசீலனை செய்யப்படும். செம்பருத்தி நகர் மக்களுக்கு மாற்று இடம் பார்த்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மீனவர் கூட்டுறவு சொசைட்டியில் புதிதாக இணைந்துள்ள 190 மீனவ மகளிருக்கு உரிய உதவித்தொகை வழங்கப்படும்” எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.