சிவகங்கை, ஜூன் 13- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காளீஸ்வரா பஞ்சாலை கடந்த இரண்டாண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இதைத் திறக்க ஒன்றிய அரசு மறுத்துவருகிறது. இதனால் போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் தயாராகி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வந்த காளீஸ்வரா மில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. இந்த ஆலையில் சுமார் 700 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். குறிப்பாக இந்த ஆலையில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், கணவரை இழந்தவர்கள் அதிகளவில் பணியாற்றி வந்தனர். இவர்களது வாழ்க்கையின் உத்தரவாதமாக இந்த ஆலை இருந்தது. கொரோனா தொற்றுக் காலத்தில் 2020-ஆம் ஆண்டு மார்ச் 23- ஆம் தேதி இந்த ஆலை மூடப்பட்டது. மார்ச் 23-ஆம் தேதி முதல் மே 17-ஆம் தேதி வரை தொழிலாளர்களுக்கு நிர்வாகம் முழுச் சம்பளம் வழங்கியது. 2020-ஆம் ஆண்டு மே 18-ஆம் தேதி முதல் டிசம்பர் 26-ஆம் தேதி பாதிச் சம்பளம் வழங்கியது. 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி முதல் 50 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு ஆலை இயங்கியது. ஜூலை 31-ஆம் தேதி முதல் மூலப்பொருள் பற்றாக்குறை காரணமாக ஆலை இயக்கம் நிறுத்தப்பட்டது. இன்று வரை ஆலை இயங்கவில்லை. இதனால் இங்கு வேலை செய்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். ஆலையை இயக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் நகரின் வளர்ச்சியையும் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. ஆலையைத் திறக்க வலியுறுத்தி செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு சார்பில் ஆலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.