சீர்காழி, மார்ச்.25- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆமைக் குஞ்சுகள் பொரிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நாகை மாவட்ட வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார்மீனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆகியோர் முன்னிலையில் கடலில் ஆமை குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இவ்வாண்டு கூழையார் கடல் பகுதியில் ஆமைகள் இட்ட சுமார் 32 ஆயிரம் முட்டைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. குஞ்சுகளும் முட்டையிலிருந்து பொறித்து வெளிவந்தது. இந்நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டனர். கடலில் விட்ட நாளிலிருந்து 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் குஞ்சி பொறிக்கப்பட்ட இடத்திற்கே இனப்பெருக்கத்திற்காக ஆமைகள் வரும் என்று வன உயிரின காப்பாளர் யோகேஷ்குமார் மீனா தெரிவித்தார்.