தூதனூர் பகுதி மக்கள் குடிநீர் கேட்டு இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இடங்கணசாலை நகராட்சி 2ஆவது வார்டு தூதனூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து இடங்கணசாலை நகராட்சி தலைவரிடம் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடத்துடன் 2ஆவது வார்டு உறுப்பினர் மாதேஸ் தலைமையில் இன்று இடங்கணசாலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குடிநீர் பற்றாக்குறை குறித்து கோரிக்கை மனு அளித்தனர். இதனையடுத்து நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஒரு வாரத்தில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.