இராமநாதபுரம்,பிப்.17- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பிப்ரவரி 17 அன்று வேளாண்மை துறையின் மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையேற்று விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று கோரிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் முன்னிலையில் விவசாயிகளிடம் நேரடியாக கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது விவசாயிகள் தெரிவிக்கையில், இராமநாதபுரம் மாவட்டம் விவசாயத்தையே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. அத்தகைய நிலையில் நடப்பாண்டில் பருவமழை பொய்த்துப் போனதால் பல்வேறு இடங்களில் நெல், கரும்பு, பருத்தி, மிளகாய், வாழை என பயிரிட்ட அனைத்து பயிர்களும் முழுமையாக பல்வேறு இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இதை ஈடுகட்டும் விதமாக விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டுமென தெரிவித்தார்கள். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், வேளாண்மை துறையின் மூலம் முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கிற வகையில் அரசுக்கு அறிக்கை அனுப்பி பெற்று தரப்படும். விவசாயிகள் கோரிக்கையான பரலையாற்றுப் பகுதியில் வரத்து கால்வாய் சீரமைத்தல் மற்றும் பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டுதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.