districts

img

காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புக! சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை, ஏப்.7-  சத்துணவு துறையில் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டுமென தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் பெ.அன்பு தலைமையில் வியாழனன்று புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எஸ்.சீத்தாலெட்சுமி, பொருளாளர் க.பிச்சைமுத்து ஆகியோர் பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ஜபருல்லா, துணைத் தலைவர் கே.குமரேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் கு.சத்தி நிறைவுரையாற்றினார். மாவட்ட துணைச் செயலாளர் பி.பாண்டி நன்றி கூறினார். சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்பப் பாதுகாப்புடன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். எரிவாயு சிலிண்டர் தேவைக்கு ஏற்ப அரசே வழங்க வேண்டும். தகுதி உள்ள சத்துணவு ஊழியர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல பெண் ஊழியர்களுக்கு 12 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.