புதுக்கோட்டை, ஏப்.7- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து பதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமையன்று தீர்ப்பு வழங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கேவிஎஸ் தெருவைச் சேர்ந்தவர் விஜய் (24). கடந்த 2020-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியின் வீட்டிலிருந்து கடத்தி சென்னையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு கடத்திச் சென்றுவிட்டார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் துறையினர் விஜய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சென்னை சென்று விஜயை கைது செய்து சிறுமியை மீட்டனர். வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விஜய் மீது சுமத்தப்பட்ட குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 40 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். மேலும் சிறுமிக்கு அரசு சார்பில் இருபத்தி 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து விஜய் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.