அறந்தாங்கி, பிப்.11 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர்மன்ற தேர்தலில் 27 வார்டுகளிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து வார்டுகளிலும் சுப.வீரபாண்டியன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரத்தில் சுப.வீரபான்டியன் பேசுகையில், “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நீடித்து இருப்பதன் காரணம் இது கொள்கை அடிப்படையிலான கூட்டணி. வளர்ச்சியை நோக்கி நகர்கிறது தமிழகம். கர்நாடகாவில் மதத்தின் பெயரால் மோதலை தூண்டுகிறது பாஜக. எல்லா பிரச்சனையையும் விட்டுவிட்டு இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் ஆடையை அணிந்து வரக்கூடாது என்று கூறி கலவரம் செய்கிறார்கள். ஆடை அணிவது அவர்களின் விருப்பம். அவர்களின் நம்பிக்கை. இன்னொருவரின் மத சுதந்திரத்தில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. இவர்களின் நம்பிக்கையை சிதைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. உடை அணிவதில், உணவு பழக்கத்தில், வாழ்க்கை முறையில் தலையிடுவது அநாகரீகம். அதை வளரவிடக் கூடாது. எனவே பாஜக - அதிமுக கூட்டணியை முறியடிக்க அறந்தாங்கி நகர 27 வார்டுகளையும் சேர்ந்த மக்கள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார். பிரச்சாரத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. திமுக மாவட்ட அவைத்தலைவர் பொன்துரை, திமுக நகர செயலாளர் இரா.ஆனந்த், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் தங்கராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.