districts

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவரா?

பெரம்பலூர், அக்.18 - தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தீபாவளி போனஸ் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.17 அன்று மாவட்டம் தோறும் அந்தந்த சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தில் மனு அளிக்க முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் நான்குரோடு அருகிலுள்ள சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கொளஞ்சி, செயலாளர் ஆர்.செல்வி, பொருளாளர் எஸ்.வேணி, சிஐடியு மாவட்ட தலைவர் ரெங்கநாதன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர்.  அம்மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ஒன்றியங்களிலும் மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் 95 பேர் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு மாத ஊதியம் 4,500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே எங்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருத்துவ உபகரணங்களுக்கு பேட்டரி போடவும் பராமரிக்கவும் மாதந்தோறும் பராமரிப்புப் படி வழங்கிட வேண்டும்.  தற்போது அறிவித்துள்ள ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையினை எவ்வித நிபந்தனையுமின்றி வழங்குவதோடு அனைத்து ஊழியர்களுக்கும் 6 ஆம் தேதிக்குள் மாத ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். மக்களை தேடி மருத்துவப் பணிக்கு செல்ல போக்குவரத்துப்படி வழங்க வேண்டும். பணியின் போது விபத்து ஏற்பட்டால் மருத்துவ செலவை நிர்வாகம் ஏற்க வேண்டும். அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்திற்கு சுகாதார இணை இயக்குநர் வழியாக கொண்டு சென்று தங்களது வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டுகிறோம் என தெரிவித்துள்ளனர்.