நாகப்பட்டினம், நவ.22- அகவிலைப்படி உயர்த்த வேண்டும். ஓய்வு பெறும் நாளில் அனைத்து பலன்களையும் உடனே வழங்க வேண்டும். போக்குவரத்துத் துறையில் ஒப்பந்த முறைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை முழுவதுமாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை வாயிலில் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத் தலைவர் ஏ.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்திற்கு மத்திய சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் பகுதியில் உள்ள மண்டல அலுவலகம் அருகே போக்குவரத்துத் துறை ஓய்வூதியர் சங்க பொதுச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, மாவட்ட பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன், ஓய்வூதியர் சங்க மண்டலத் தலைவர் லோகநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
கும்பகோணம்
கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தலைமையகம் முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு போக்குவரத்து கழக கும்பகோணம் மண்டல சிஐடியு தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார்.