districts

img

‘சுரங்கம் தோண்டுவதும் இயற்கையைப் பாதுகாப்பதும் கைகோர்க்கவே முடியாது’ அரிட்டாபட்டி டங்ஸ்டன் விவகாரத்தில் திசைதிருப்பும் மோடி அரசு

மதுரை, டிச.1- நாயக்கர்பட்டி டங்ஸ்டன் மண்ட லத்தில் வேதாந்தா குழுமத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் சுரங்கம் அமைக்கும் என்று ஒன்றிய மோடி அரசு  பிடிவாத மாக அறிவித்துள்ள நிலையில், ‘ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க அனு மதிக்கமாட்டோம்’ என, மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி உள்ளிட்ட பல்லுயிர் பாதுகாப்பு மண்ட லத்தை அடுத்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஏலத்தை ரத்து செய்யக்  கோரி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு ஒன்றிய அரசு, தனது அதிகாரத்தை காட்டும் விதமாக பதிலளித்துள்ளது. 2023 ஆகஸ்ட் 17ல் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின் மூலம் ‘முக்கிய மற்றும் அரிய கனிமங்கள்’ தொடர் பான சுரங்க குத்தகைகளை ஏலம் விட தனக்கு முழு அதிகாரம் உள்ளதாக கூறியுள்ளது.

மேற்கண்ட நாயக்கர் பட்டி டங்ஸ்டன் மண்டலத்தில் 20.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வெறும் 1.93 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டுமே உயிர்ப்பன்மைய பாரம்பரிய தளம் என்று குறிப்பிட்டு, மீதமுள்ள பகுதி களில் சுரங்க வேலைகளை தொடங்க முடியும் என்கிறது மத்திய அரசு. “ஏலத்திற்கு எந்த எதிர்ப்பும் இல்லை, மாநில அரசும் கோரவில்லை” என்று பொய்யான தகவல்களையும் பரப்பு கிறது. கடும் எச்சரிக்கை இந்த அராஜக போக்குக்கு எதி ராக உறுதியான குரல் எழுப்பியிருக் கிறார் மதுரை நாடாளுமன்ற உறுப்பி னர் சு.வெங்கடேசன். “அரிட்டாபட்டி யிலிருந்து ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்கமாட்டோம்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

“தமிழ் மற்றும் தமிழர் வரலாற் றின் பெருமைமிகு அடையாளங்கள், உயிர்ப்பன்மைய வளமிக்க சூழல் அமைவுகள், உயிரினங்கள் மற்றும் பல நூற்றாண்டுகால வரலாறு கொண்ட தமிழர் வழிபாட்டுத்தலங் களை உள்ளடக்கிய இடம்தான் இந்த  கனிமத் தொகுதி. இதைக் கடிதம் வாயி லாகவும் நேரில் சந்தித்தும் விளக்கிய பின்னரும் ஒன்றிய அரசு தன் முடி விலிருந்து பின்வாங்க மறுக்கிறது” என்று சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள் ளார். “தமிழ் மற்றும் தமிழர் உணர்வு களையும் உரிமையும் துச்சமென மதிக் கும் பாஜக அரசின் அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகத்தின் இந்த முடிவாகும்” என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“அரிட்டாபட்டியை உள்ள டக்கிய பகுதிகளில் கனிமம் எடுக்கத் துடிக்கும் முயற்சியை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள். பாஜக அரசு கூறுவதுபோல தொல்லியல், கலாச் சார மற்றும் இயற்கை பாரம்பரிய பாதுகாப்பு ஆகியவை டங்க்ஸ்டன் எடுப்பதற்கான சுரங்கப் பணிகளுடன் கைகோர்த்து நடக்கவே முடியாது. அரிட்டாபட்டியை உள்ளடக்கிய சுரங்கத் தொகுதிக்குள் ஆய்வுக்காகக் கூட ஒரு பிடிமண்ணை ஹிந்துஸ் தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் எடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முதல்வர் மு.க. ஸ்டாலின், வனத்துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் பெ.மூர்த்தி ஆகியோரும் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்துக் கட்சியின் உறுதியான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் டங்ஸ்டன் மண்டலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி உட்பட  கிராம மக்களும் தொடர்ந்து போராட்டக் குரல் எழுப்பி வருகின்றனர். ஒன்றிய அரசின் இந்த பிடிவாத போக்கும், தமிழக மக்களின் ஒற்றுமையான எதிர்ப்பும், வரும் நாட்களில் இந்த போராட்டம் பெரும் மக்கள் இயக்கமாக மாறும் என்பதை உணர்த்துகிறது.