tamilnadu

img

தண்ணீரில் மிதக்கும் விழுப்புரம் 42 ஆண்டுகளுக்கு பிறகு அதி கன மழை

சென்னை,டிச.1- தென்மேற்கு வங்கக்கடலில் உரு வான பெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் டிசம்பர் 30 அன்று மாலை 5 மணி  அளவில் கரையைக் கடக்க தொடங்கி யது. இரவு 10.30 முதல் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்துள்ளது.

30 மணி நேரம் தொடர் மழை!

இந்த நிலையில் சனிக்கிழமை அதி காலை 2 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்யத் தொடங்கிய நிலையில், 30 மணி நேரத்தை கடந்தும் விழுப்புரம் நகரில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், விழுப்புரம் புதிய  பேருந்து நிலையத்தில் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீரால் சூழப்பட்டு காட்சியளிக் கின்றன. நகரின் விரிவாக்கப் பகுதி யில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுவ தால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கந்தாடு ஏரியில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள கூனிமேடு என்ற பகுதியை வெள்ளநீர் சூழ்ந்துள் ளது. அதோடு கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்து குடிசை வீடுகள் இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளி யாகியுள்ளது. மேலும் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்துள்ளனர்.

துண்டிக்கப்பட்ட போக்குவரத்து

ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கூனிமேடு மற்றும் மண்டகப்பட்டு இடையே யான போக்குவரத்து துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமை யாக பாதிப்பு அடைந்துள்ளனர். திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு ஏற்பட்டுள் ளது. தொடர் கனமழையால் வம்பு பட்டு ஏரி நிரம்பி சாலைகளில் பெருக் கெடுத்து ஓடும் வெள்ளத்தால் புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

850 தற்காலிக முகாம்கள்

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்டத் தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடு முறை அளிக்கப்பட்டது. மேலும், கனமழையினால் ஏற்படும் பாதிப்பு களை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளையும் எடுத்தது. பாதிக்கப் படுபவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்காக 850 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மரக்காணம், வானூர் ஆகிய தாலுகாக்களில் 12 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் தயார்ப்படுத்தப்பட்டு அந்த மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு தேவையான உணவு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு 

இந்நிலையில், சனிக்கிழமை இரவு முதல் இடை விடாமல் கொட்டிய மழையால் சாலையெங்கும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஏராளமான கிராமங்களில் முன்னெச்சரிக்கையாக துண்டிக்கப்பட்ட மின் விநியோகம், சுமார் 30 மணி நேரமாக மின்சாரம் வழங்கப்படவில்லை. விக்கிரவாண்டி அருகே மேலக்கொந்தை கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது அக்கிராம மக்கள் வீட்டுக்குள் முடங்கினர். 

வீடூர் அணை திறப்பு

திண்டிவனம் அருகே உள்ள வீடூர் அணை யின் கொள்ளளவு 605 மில்லியன் கன அடியாகும். 487.52 மில்லியன் கன அடி நிரம்பியது . அணைக்கு வினாடிக்கு 36,203 நீர்வரத்து வரத்  தொடங்கியது. இதையடுத்து, அபாய சங்கு ஒலி  எழுப்பினர். மேலும், அணையில் 9 கதவுகளை யும் திறந்து உபரி நீரை வெளியேற்றினர். இதன் காரணமாக, சங்கராபரணி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொண்டு வெளியேறியது. மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதிகளில் உள்ள குடியிருப்பு களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது

கொட்டி தீர்த்த கனமழை

விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆண்டு களுக்கு பிறகு தற்போது தான் அதிக மழை பெய்துள்ளது. மயிலத்தில் 50 செ.மீ. மழை பெய்துள்ள நிலையில் அங்குள்ள தென் ஏரி உடைந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள அருந்ததியர் நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் அப்பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் சராசரி மழை அளவு 23.98 என்ற நிலையில் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 485 மில்லி  மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. 42 ஆண்டு களுக்கு பிறகு இந்த மழை பெய்துள்ளது.

துணை முதல்வர்

புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர்கள் க.பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், செந்தில் பாலாஜி, சி.வி.கணேசன், மாவட்ட ஆட்சியர்கள் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.