மதுரை, பிப்.28- பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக கோவை சதாப்தி ரயிலில் பயணித்த முதிய பயணியை மிரட்டியும் முதியவருக்கு ஆதரவாக இதனை தட்டிக்கேட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜூவை ரயில்வே காவல்துறையை கொண்டு மிரட்டி அடாவடித்தனம் செய்த பாஜக மாநிலத் துணைத்தலைவர் திருப்பதி நாராயணனைக் கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாநகர் - புறநகர் மாவட்டக்குழுக்கள், மதுரை மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் மதுரை முனிச்சாலையில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்டப் பொருளாளர் ஜா. நரசிம்மன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் துவக்கிவைத்து பேசினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் த.செல்லக்கண்ணு நிறைவுரையாற்றினார், புறநகர் மாவட்டத் தலைவர் ஆஞ்சி,மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மதுரை மாநகராட்சி துணைமேயர் டி.நாகராஜன்,சிபிஎம் தெற்கு பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் கே. அலாவுதீன், செயலாளர் என். முத்து அமுதநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.