districts

பேரின்ப வாழ்வு

        (கோவி.பால.முருகு)

அறிவுடை நட்பை ஆராய்ந்து கொள்க
 அதனால் துன்பம் வராது வெல்க!
அறிவினார் துன்பம் வந்ததைத் துடைப்பார்
 அறிந்து மீண்டும் வராமல் தடுப்பார்!

பெரியாரைப் போற்றிச் சுற்றமாய்க் கொள்க
 பெறும்பேர் அதுவே பேணியே வெல்க!
பெரியார் உன்னிலும் பெரியார் அறிந்து
 பிணைத்திடு சுற்றமாய் அன்பினைச் சொரிந்து!

ஆள்வோர் அறிஞர் ஆதரவைக் கொள்வார்
 ஆய்ந்து சொல்வதில் அவரால் வெல்வார்!
நல்லோர் கூட்டினை நாளும் கொள்க
 நடக்காது பகைவர் சூழ்ச்சி வெல்க!

கடிந்துத் தவறினைக் கண்டிக்கும் பெரியார்
 கையைப் பிடித்திடின் கெடுப்போர் இனியார்?
கடிந்திடும் பெரியார்க் கருத்தினைக் கேளார்
 காணார் பகைவர் இன்றியும் கெடுவார்!

முதலிலா வணிகர்க்கு முன்னேற்றம் இல்லை
 முக்கியத் துணயிலார் வாழ்வும் தொல்லை
சதையும் நகமாம் பெரியார் தொடர்பு
 சாரா திருப்பின் நெருங்கிடும் நெருப்பு!

பெரியோர் துணையுடன் வாழ்தல் சிறப்பு
 பேணாது விட்டால் பெரிய இழப்பு!
பெரியோர் அனைத்திலும் பெரியோர் ஆவார்
  பேரின்ப வாழ்விற்கு அவரே ஆவார்!