districts

பாலியல் வன்முறை குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் மாநாடு கோரிக்கை

கிருஷ்ணகிரி,ஆக. 14-   அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள், உழைக்கும் பெண்கள் சிறுமிகள் மாணவிகள் மீது தொடுக்கப்படும் குடும்ப வன்முறைகள் உட்பட அனைத்து விதமான தாக்குதல்களையும் தடுக்க மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர் மகளிர் மாநாடு மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில மகளிர் மாநாடு கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை (ஆக.13) நடைபெற்றது. இம் மாநாட்டில் சமூகம், குடும்பம், அலுவலகம், கல்வி நிலையங்களில் பெண்கள், சிறுமிகள், மாணவிகள் மீது தொடுக்கப்படும் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்கள், அடக்குமுறைகளை தடுக்கவும் பாலின சமத்துவத்தை உருவாக்கவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் ஊழியர்களுக்கு அலுவலகங்களில் ஏற்படும் துன்புறுத்தல்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஒரு பெண் அதிகாரியையும் அதற்கான உள்ளக குழுக்களையும் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வயது வரம்பை தளர்த்துக ஒன்றிய அரசில் வழங்கப்படுவது போன்று பெண் ஊழியர்களுக்கு குழந்தைகள் வளர்ப்பதற்கு 2 ஆண்டுகள் விடுப்பு வழங்க வேண்டும். கணவனை இழந்த பெண்கள் அரசு பணிக்கு வர வயது வரம்பு தளர்த்தப்பட வேண்டும்.

அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான கழிப்பிட ஓய்வறை வசதிகள் உருவாக்கப்பட வேண்டும். மாற்றுத் திறனாளிகளாக உள்ள பெண் ஊழியர்களுக்கு அனைத்து அலுவலகங்களிலும் அதற்கேற்ற கழிவறை ஏற்படுத்த வேண்டும். 12 மாதம் மகப்பேறு விடுப்பு மகளிர் தினத்தை நினைவு கூறும் வகையில் மார்ச் 8 விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தர படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு 12 மாதங்கள் வழங்க வேண்டும், மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு  சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும், அரசு அலுவலகவளாகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்த வேண்டும். அனைத்து அலுவலகங்களிலும் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டு கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் உட்பட பல தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. பெண்கள் மற்றும் மகளிர் க்கான  விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகள், புகார் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநாட்டு நிகழ்வுகள் அனைத்தையும் வரவேற்பு குழு நிர்வாகிகள் மாவட்ட தலைவர் சந்திரன் செயலாளர் நடராஜன் ஒருங்கிணைத்தனர்.