கள்ளக்குறிச்சி, மே 25- கள்ளக்குறிச்சி அருகே பொற்படாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். அவரது மனைவி கலையரசி (28) இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக் குழந்தையுடன் மனு அளிக்க வந்தார். அவருடன் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 5 பேர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: பொற்படாக்குறிச்சி ஏரியின் அருகே தெற்கு தெரு அமைந்துள்ளது. இந்த தெருவை அப்பகுதியில் வீட்டு மனை வைத்திருப்பவர்களும், விவசாய நிலத்திற்கு செல்பவர்களும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசுக்கு சொந்தமான தெருவை இதே பகுதியைச் சேர்ந்த சின்னு, கருப்பாயி ஆகியோர் ஆக்கிரமித்து தகர கொட்டகை அமைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பாளர்களை அகற்றும்படி கேட்டபோது அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் இதே பகுதியைச் சேர்ந்த ஊராட்சி செயலாளரும் இந்த தெருவை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். எனவே தெரு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.