கடலூர், ஏப். 19- இந்தி திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கும் நுழைவுத்தேர்வு என்ற ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருப்பாதிரிப்புலியூர் ஜவான் சாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் கண்டமங்கலம், திருவெண்ணை நல்லூர், திண்டிவனம், மயிலம் உள்ளிட்ட 12 மையங்க ளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் க்கோட்டையில் மாவட்டச் செயலாளர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய மையங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், வேலூர் வடக்கு, தெற்கு, காட்பாடி ஆகிய 4 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் சங்கரி, மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம், வெள்ளிமலை, சங்கராபுரம், ரிஷிவந்தியம், திருக்கோவிலூர், கெடிலம் உள்ளிட்ட 10 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. உளுந்தூர்பேட்டை யில் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி, செய்யாறு உள்ளிட்ட 6மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலை நகரத்தில் மாநில குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.