districts

img

கடலூர் மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை  

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  மழையை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாக சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடலூரில் கரை கடக்க வாய்ப்பு:  

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து நவ.11 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலை 5 மணியளவில் வட தமிழகத்தில் காரைக்காலுக்கும் ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை. ஆனால் கடுமையான மழைப்பொழிவு மற்றும் கடல் சீற்றம் அதிகமாக 2 மீட்டர் உயரத்திற்கும், மணிக்கு 60 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் பார்வை:  

தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட தானம் நகர், வண்டிப்பாளையம், புதுபபாளையம், மஞ்சகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக தண்ணீரை மோட்டார் பம்ப் மூலம் வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தானம்நகர், வண்டிப்பாளையம் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன், நகர செயலாளர் ஆர்.அமர்நாத், நகர் குழு உறுப்பினர்கள் கருணாகரன், பக்கிறான், நாராயணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.