districts

கவலை அளிக்கும் விதத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்முறைகள் பெண்கள், பெண்குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க தீவிர நடவடிக்கை வேண்டும்

தருமபுரி செப்- 20 , தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை கள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு தீவிர நட வடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநயாக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மாதர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய தலைவர் ஸ்ரீமதி, அகில இந்திய துணைத்தலைவர்கள் உ.வாசுகி ,பி.சுகந்தி, மாநிலப் பொதுச்செயலாளர் ஏ.ராதிகா, பொருளாளர் ஜி.பிரமிளா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் அனைத்து பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிடைப்பதில் சிரமம் உள்ளது. அனைத்து பொருட்களும் கிடைக்க தமிழக அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். பண்டிகை காலங்களில் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். புதிய ரேசன் கார்டு கேட்டு விண்ணப்பித்த அணைத்து விண்ணப்பதாரருக்கும் புதிய கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மனுக்களை பூர்த்தி செய்வதில் குளறுபடிகள் உள்ளன. கண் ஸ்கேன் செய்யும் முறையால் மக்கள் பொருட்கள் வாங்குவதில்சிக்கல் ஏற்படுத்தும், எனவே இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை

மத்திய சென்னை அண்ணாநகர் மேற்குநடுவாங்கரையில் வசிக்கும் கட்டிட தொழிலாளியின் 11 வயது மகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியின் சம்பவத்தில் சட்டபடி நடவடிக்கை எடுக்காமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் கே-4,காவல்நிலைய ஆய்வாளர் ராஜி மீது தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், உரிய உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். 

நுண்நிதி-பைனான்ஸ் நிறுவனங்களின் அடாவடி

தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் 360 நுண்நிதி நிறுவனங்களும் ஆர்.பி.ஐ, நிறுவன வழிகாட்டுதலின்படி செயல்படுத்த வேண்டும்.

தென்காசி மாவட்டம் செல்ல பிள்ளையார்குளம் கிராமத்தை சேர்ந்த உச்சிமாகாளி மற்றும் குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டிய முத்தூட் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்.

காவல்துறை மெத்தனம்

தமிழ்நாட்டில் தஞ்சை , கிருஷ்ணகிரி, திருச்சி,சென்னை போன்ற மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் பொதுத்தளத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் கடந்த 3 மாதங்களில் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. அதே நேரத்தில் பெண்கள் மீதான வன்முறையும்  அதிகரித்து வருகின்றது.

இது போன்ற பிரச்சனைகள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்போது உரிய சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் உள்ளது.காவல்துறை சமரசம் செய்யும் நிலை உள்ளது.இது சரியானதல்ல எனவே தமிழக அரசும் காவல்துறையும் புகார் மீது சட்டரீதியான நடவடிக்கையினை சமரசம் இல்லாமல் எடுக்க வேண்டும். 

கலைஞர் மகளிர் உரிமைதொகை கேட்டு விண்ணப்பித்த அணைவருக்கும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருக்கலைப்பு கும்பலை தடுத்திடுக

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பிக்கிலி ஊராட்சியில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை கட்டாய திருமணம் செய்யும் நிலமை உள்ளது.இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இது போன்ற வட்டங்களில் கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என கண்டறியும் சட்டத்திற்கு புறம்பான கருக்கலைப்பு கும்பலை தடுக்க அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.