districts

img

எழுத்தாளர் கோணங்கிக்கு கி.ரா. விருது 

கோவை : சக்தி மசாலா நிறுவனம் மற்றும் கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகர் வட்டம் வழங்கும் 2021ம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக புத்தக தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் , கடந்த 5 ஆண்டுகளாகக் கோவை விஜய பதிப்பகத்தின் வாசகர் வட்டம் சார்பில் , சிறந்த படைப்பாளிகளுக்கு விருது வழங்கப்படுகிறது.

அதன் படி , சிறந்த படைப்பாளிகளுக்கு ஜெயகாந்தன் விருது, கவிஞர் மீரா விருது, புதுமைப் பித்தன் விருது வழங்கப்படுகிறது . மேலும்,  சிறந்த அரசு நூலகருக்குச் சக்தி வை கோவிந்தன் விருது மற்றும் சிறந்த புத்தக விற்பனையாளருக்கு வானதி திருநாவுக்கரசு விருது ஆகியவை வழங்கப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த ஆண்டு முதல் கோவை சக்தி மசாலா தம்பதியினர் துரைசாமி - சாந்தி துரைசாமி ஆகியோரும், படைப்பாளிகளுக்கான விருதை வழங்க முன்வந்துள்ளனர்.மேலும், ரூ.5 லட்சம் விருது தொகை அளிப்பதாகவும் அறிவித்திருக்கின்றனர். 

தற்போது, 2021ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் கோணங்கி , நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு செப்டம்பர் 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு இணையவழியில் நடைபெறும் நிகழ்ச்சியில் விருது வழங்கப்படும் என்று கோவை விஜயா பதிப்பக நிறுவனர் மு. வேலாயுதம் மற்றும் வழக்குரைஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் கோணங்கியின் இயற்பெயர் இளங்கோவன் . நென்மேனி , மேட்டுப்பட்டி கிராமத்தில் 1956ஆம் ஆண்டு  நவம்பர் 1ஆம் தேதி பிறந்தார். சுதந்திரப் போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸின் மகள் சரஸ்வதி - எழுத்தாளர் மே.சு.சண்முகம் தம்பதியரின் இரண்டாவது மகனான கோணங்கி ,1980களின் தொடக்கத்திலிருந்து எழுதி வருகிறார். 

இவர் பாழி, பிதிரா , நீர்வளரி ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் 6 நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன .