districts

img

கோவை பந்தயச் சாலை பகுதியில் சந்தனமரம் வெட்டி கடத்தல்!

கோவை பந்தயச் சாலை பகுதியில் நடைபாதை அருகே இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாநகரின் மையப் பகுதியான  பந்தயச் சாலை பகுதியில்  முக்கிய அரசு அலுவலகங்களும்,  நீதிபதிகள் குடியிருப்புகளும்,  காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடு, மற்றும் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. மேலும் பந்தயச் சாலையைச் சுற்றி நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூங்கா மற்றும் ஒளிரும் விளக்குகள் ஆகியவையும் பொருத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் உயர் அதிகாரிகள் இருக்கக்கூடிய அந்த பகுதியில் அடிக்கடி சந்தன மரம் வெட்டி கடத்தப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,நேற்று இரவு வருமானவரித்துறை அலுவலகம் எதிரே வளர்ந்திருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி திருடிச் சென்றனர். தகவல் அறிந்து வந்த பந்தயச் சாலை போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள  சிசிடிவி  காட்சிகளை வைத்து மரத்தை வெட்டிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.