கோவையில் வார பத்திரிகையை கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பொழுது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ஒம்கார் பாலாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ஈஷா யோகா மையம் குறித்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வரும் நக்கீரன் வார இதழை கண்டித்து கடந்த மாதம் 27 ஆம் தேதி கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அவரது மகனும் இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜியும் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது நக்கீரன் ஆசிரியர் கோபால் குறித்தும் , அவரது நாக்கை அறுக்க வேண்டும் எனவும் பேசியிருந்தார். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கோவை பந்தய சாலை காவல்துறையினர் ஓம்கார் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், குற்ற நோக்குடன் செயல்படுதல் என்ற இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் ஓம்கார் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.