சிங்கப்பூரில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வந்த ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள், மற்றும் தங்க செயின்களை கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நேரடி விமானச் சேவை இருந்து வருகிறது. இதில் சிங்கப்பூரிலிருந்து கோவை வரும் ஸ்கூட் விமானத்தில் சட்டவிரோதமாகத் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கோவை வந்த ஸ்கூட் விமான பயணி ஒருவரைச் சோதனை செய்தபோது அவரிடம் 10 தங்கக் கட்டிகள், இரண்டு தங்க செயின்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் கடத்திவரப்பட்ட ரூ. 90 லட்சம் மதிப்பிலான தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.