கோவை, நவ.6- தங்கநகை வேலை செய்யும் சிறு பட்டறைகளுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என சிஐடியு கோயம்புத்தூர் தங்க நகை தொழிலாளர் யூனியன், தமிழக முதல்வரிடம் மனு அளித்தனர். சிஐடியு கோயம்புத்தூர் தங்க நகை தொழிலாளர் யூனியன் பொதுச்செயலாளர் சந்திரன் தலைமையிலான குழுவினர் முதல்வரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, காலம்காலமாக உற்பத்தியாளர்களிடமிருந்து தங்கநகை வாங்கி வந்து சிறு, சிறு பட்டறைகளாக வைத்து தங்க நகை வேலை செய்து வருகின்றோம். தற்போது, பெரிய பெரிய பேக்டரிகள் மற்றும் நவீன தொழில் இயந்திர பேக்டரிகள் உருவாகியுள்ளது. இவர்கள் அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் கூட கொடுப்பதில்லை. எந்தவித சட்ட, சமூக பாதுகாப்பும் இல்லாமல் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த பேக்டரிகள் காரணமாக சிறு,சிறு பட்டறைகளுக்கு வேலை கொடுப்பதை உற்பத்தியாளர்கள் குறைத்து கொண்டே வருகின்றார்கள். இதனால், பட்டறையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பட்டறை வைத்து வேலை செய்தால் நபர் ஒன்றுக்கு ரூ.600 முதல் ரூ.700 கிடைப்பது என்பது அரிதாகிவிட்டது. இதில், வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் உள்ளடக்கம். தங்கநகை வேலை என்றாலே தொழிலாளிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் தொழில் என்று வெளி வட்டாரத்தில் நினைக்கிறார்கள். மாதத்தில் ஏறக்குறைய 15 நாட்கள்தான் வேலை இருக்கும், மீதி நாட்கள் வேலை இல்லாமல் இருக்க வேண்டியுள்ளது. எப்பொழுது வேலை வரும் என்று எதிர்பார்த்து வேறு எங்கும் போக முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதற்கிடையில் வீட்டு வாடகை, பட்டறை வாடகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மின்சார கட்டணம் என்பது வர்த்தக்கத்தின் அடிப்படையில் கேட்பதால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி கொண்டிருக்கின்றோம். எனவே, பட்டறை வைத்து வேலை செய்யும் நகைத் தொழிலாளிகளுக்கு சலுகை கட்டணத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தங்கநகை பூங்கா அமைக்கப்படும்!
கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக செவ்வாயன்று வருகை புரிந்த முதலமைச்சரிடம், தங்க நகை பூங்கா அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தனர். இதனையடுத்து, புதனன்று மு.க.ஸ்டாலின், கலைஞர் நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையில், கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து கெம்பட்டி காலனி பகுதியில் தங்க நகை தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த கொண்டாட்டமானது அனைத்து தங்க நகை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.