districts

img

அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே.அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

அதிமுக எம்.எல்.ஏ அம்மன் கே.அர்ஜூனன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுக கோவை வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2022- மே மாதம் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார், அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த ஆவணங்களை தொடர்ந்து சோதனையிட்ட போது அவர் தனது வருமானத்திற்கும் அதிகமாக சொத்துகளை சேர்த்தது தெரியவந்தது.

அம்மன் அர்ஜூனன் கடந்த 2016-இல் கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் ஏழை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அப்படி இருக்கையில் அவரது சொத்துகள் திடிரென அதிகமானதே போலீசாரின் சந்தேகத்திற்கு காரணமாக அமைந்தது. குறிப்பாக அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வருவாய் அதிகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு வீடு, வாகனம், நிலம் என அவரது சொத்து மதிப்பு ரூ.2.30 கோடி சொத்துக்கள் இருந்தது. ஆனால் 2022-ல் விபரங்களை சோதனையிட்ட போது அதன் மதிப்பு ரூ.5.96 கோடியாக உயர்த்திருந்தது. மேலும் வருவாய், செலவீனங்கள் கணக்குகளை வைத்து பார்த்த போது அவர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த  கால கட்டத்தில் மட்டும் சொத்து மதிப்பு வருவாயை விட 71.19% உயர்ந்து, ரூ.2.75 கோடி கூடுதலாக சேர்த்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த சொத்துகளை தனது பெயரிலும், மனைவி விஜயலட்சுமி, மகன், மகள் பெயரிலும் வாங்கியுள்ளார்.

இந்நிலையில் கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமியின் புகாரின் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக எம்,எல்.ஏ அம்மன் கே.அர்ஜுனன் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் செல்வபுரம் பகுதியில் உள்ள அம்மன் அர்ஜூனன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தகவல் அறிந்து வந்த அதிமுக தொண்டர்கள் வழக்கறிஞரை வீட்டிற்குள் அனுமதிக்குமாறு கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்படலாம் என கூறப்படுகிறது