districts

img

துணைவேந்தர்களுக்கு பதவிக்காலம் நீட்டிப்பு ஊழலை நீட்டிக்க ஆளுநர் உதவுவதாக குற்றச்சாட்டு!

சேலம், டிச.22- ஊழல் செய்த துணைவேந்தர்களின் பதவிகாலத்தை நீட்டித்து, ஊழலை நீட்டித்துக் கொள்ள ஆளுநர் உதவுவதாக, பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இதன்பின் சங்கத்தின் கௌரவத் தலைவரும், சட்ட ஆலோசகரமான இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆளுநர், வேந்தர் என்ற முறையில் பணி நியமனத்திலும், பணியாளர்கள் நியமனத்திலும், பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதிலும் தலையிடுவது வெட்கக்கேடானது. குறிப்பாக பிரேம்குமார் என்ற பேராசிரியரை பதவி நீக்கம் செய்யக்கூடாது என்று 11 மாதங்களுக்கு முன்பு அரசு அதிகாரிகள் உட்பட்ட ஆட்சிக்குழு முடிவு எடுத்தபொழுது, அந்தக் கோப்பினை கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் அந்த ஆணையினை மீண்டும் ஜெகநாதனுக்கு அனுப்பி வைத்து, இப்பொழுது அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற ஒவ்வொரு பல்கலைக்கழக செயல்பாட்டிலும், அன்றாட பணிகளிலும் உரிமை கேட்கும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பழி வாங்கப்படுவதற்கு பின்புலமாக ஆளுநர் நிற்பது வேதனைக்குரியது. ஊழல் புரியும் துணைவேந்தர்களையும், ஊழலுக்கு துணை போகும் நபர்களையும், ஆளுநர் தன்னிச்சையாக அரசின் ஆலோசனை கேட்காமல் பதவி நீடிப்பு கொடுத்து, ஊழலை நீட்டிக்க உதவுகிறார். பல்கலைக்கழகங்கள் சீர்கெட்டு கிடைக்கிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நிதி கையாடல்கள் நடக்கிறது. மதுரை பல்கலைக்கழகத்தில் பணமே கிடையாது. கோவை பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திலும் இதே நிலைதான். பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழலுக்கு தீர்வுக்கோரி, எங்களது சங்கத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம், என்றார்.