கடலூர், டிச.21- விழுப்புரம்-நாகை இடையே புதிதாக அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கொத்தட்டை என்ற பகுதியில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு டிசம்பர் 23 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த சுங்க சாவடி வழியாக செல்லும் பேருந்துகளுக்கு மாத கட்டணம் ரூ.14,090. 50 நடைகளுக்கு மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பேருந்து உரிமையாளர் சங்கம் சுங்கச்சாவடி நிர்வாகத்தினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து கடலூரில் ஆலோசனை நடத்திய இச்சங்கத்தினர், தமிழகத்தில் அமைந்துள்ள வேறு எந்த சுங்கச்சாவடிகள் இந்த அளவு கட்டணம் வசூலிக்கப்படவில்லை என தெரிவித்தனர். பணிகள் நிறைவடையாத சாலையில் சுங்கச்சாவடி திறப்பு, மாத கட்டணம் நிர்ணயத்தில் மதுரை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு மீறப்பட்டுள்ளது. வெறும் 17 கிலோ மீட்டர் மட்டுமே கடலூர் மாவட்ட பேருந்துகள் இச்சாலையை பயன்படுத்தும் நிலையில் கிலோமீட்டர் ஒன்றுக்கு ஏழு ரூபாய் 50 பைசா நிர்ணயம் என சுங்கச்சாவடி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தங்களால் தொடர்ந்து பேருந்துகளை இயக்க முடியாத சூழல் ஏற்படும் என்பதால் கடலூர் மாவட்ட பேருந்து உரிமையாளர் நல சங்கம் சார்பில் கொத்தட்டை சுங்கச்சாவடியை புறக்கணிக்க முடிவு செய்து வரும் 23ஆம் தேதி புதிய சுங்கச்சாவடி திறப்பு விழா அன்று பேருந்துகளை சுங்க சாவடியில் நிறுத்தி முற்றுகையிட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும் சாலை பணிகள் முழுமை அடையாமல் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க முயலும் செயலை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிறுத்தி சாலைப் பணிகளை முழுமையாக முடிவடைந்த பிறகு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.