districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ரூ.32 லட்சம் பண மோசடி

கோவை, டிச.22- இணையதள பங்கு வர்த்தகம் எனக்கூறி, தனியார் நிறுவன  மேலாளரிடம் ரூ.32.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், விளாங்குறிச்சி, சேரன்மாநகர் பகுதி யைச் சேர்ந்தவர் நரசிம்மன் (53). தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப மேலாளராக பணியாற்றி வரும் இவர், இணையதளம் மூலம் பங்கு வர்த்தகமும் செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், முகநூல் பக்கத்தில் பங்கு சந்தை  தொடர்பான விளம்பரம் வந்துள்ளது. அதனை நரசிம்மன் பின் தொடர்ந்த நிலையில், அவரது செல்போன் எண் வாட்ஸ்  குழுவில் இணைக்கப்பட்டதுள்ளது. பின்னர் அதில் தனி யார் நிறுவனத்தின் பெயரில் இருந்த செயலியை பதிவி றக்கம் செய்து, அதன் மூலம் பங்கு வர்த்தகம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து நரசிம்மன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பல தவணைகளில் ரூ.32.19 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார். பின்னர் அதில் லாபம் வந்ததாக செயலியில் காண்பித்த நிலையில், அந்தப் பணத்தை நரசிம்மன் எடுக்க முயன்ற போது பணம் எடுக்க முடியாமல் இருந்துள்ளது. இதனால், தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த நரசிம்மன் கோவை சைபர் காவல் துறையினரிடம் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் அலை!

உதகை, டிச.22- உதகையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவிக்க, ஞாயிறன்று ஏராள மான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏரா ளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல் கின்றனர். தற்போது பனிக்காலம் தொடங்கி யுள்ளது. இந்நிலையில், கேரளாவில் அனைத்து பள்ளிகளுக்கும், தமிழகத்திலும் சிபிஎஸ்சி தனியார் பள்ளிகளுக்கு விடு முறை விடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஒரு சில நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்க இருப்பதால், கேரளம் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை உதகைக்கு அதிகரித்தது. இந்நிலையில், விடுமுறை தினமான ஞாயிறன்று உதகை அரசு தாவர வியல் பூங்கா, தொட்டபெட்டா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக காணப்பட்டது. அரசு தாவரவியல் பூங்கா வில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் கண்ணாடி  மாளிகை, ஜப்பான் பூங்கா, புல்வெளிகளில் விளையாடி மகிழ்ந்தனர். இயற்கை காட்சி களை கண்டு ரசித்தும், படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியுடன் திரும்பி செல்கின்றனர். சுற்று லாப் பயணிகள் வருகை அதிகரித்ததால் உதகையிலுள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஸ்தம்பித்தது. புத்தாண்டு வரை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிறப்பு மலை ரயில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம், கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சிறப்பு  மலை ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி, மேட்டுப் பாளையம் – உதகை மற்றும் உதகை – மேட் டுப்பாளையம் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட  நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, மேட்டுப் பாளையத்தில் இருந்து உதகைக்கு டிச.25, 27, 29, 31 ஆகிய 4 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. அதேபோல் உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு டிச.26, 28, 30, 1 ஆகிய தேதிகளிலும் சிறப்பு மலை  ரயில் இயக்கப்பட உள்ளது. பொள்ளாச்சி கவியருவி இதைபோல், கோவை மாவட்டம், பொள் ளாச்சி ஆழியார் அருகே வால்பாறை சாலை யில் அமைந்துள்ள கவியருவியில், ஞாயி றன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் கொட்டி வரும் தண்ணீரில் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். கடந்த முறை பெய்த மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட கார ணத்தால் அருவி பகுதியில் அமைக்கப்பட்டி ருந்த தடுப்பு சுவர் கம்பிகள் அனைத்தும்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. எனவே, தடுப்பு கம்பிகளை வனத்துறையி னர் அமைத்துத்தர வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ரத்தசோகையால் கோழிகள் இறக்க வாய்ப்பு

நாமக்கல், டிச.22- நாமக்கல் மண்டலத்தில் இறக்கை அழுகல், ரத்தசோகை  நோயால் கோழிகள் இறக்க வாய்ப்புள்ளதாக வானிலை  ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி  வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், கடந்த வார வானிலையைப் பொருத்தவரை, பகல் மற் றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 86, 66.2 என்ற அள விலேயே காணப்பட்டது. மாவட்டத்தில் மழை எங்கும்  பதிவாகவில்லை. இனிவரும் ஐந்து நாட்களுக்கான வானி லையில், வானம் பெரும்பாலும் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. பகல் வெப்பம்  87.8க்கு மிகாமலும், இரவு வெப்பம் 73.4க்கு மிகாமலும் இருக் கக் கூடும். கிழக்கு மற்றும் வடக்கு திசையில் இருந்து மணிக்கு  10 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், கோழியின நோய் ஆய்வகத்தில் கடந்த வாரம் இறந்த கோழிகளை பரி சோதனை செய்ததில், பெரும்பாலும் இறக்கை அழுகல்  மற்றும் ரத்தசோகை நோய் பாதிப்பால் இறந்திருப்பது  தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் கோழிக்கு  அளிக்கும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளான  கிளாஸ்டிரியம், ஸ்டெப்லோகாக்கஸ் மற்றும் ஈக்கோலை  ஆகியவற்றின் தாக்கம் உள்ளதா? என்பதை பரிசோதனை  செய்து, அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை  கையாள வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் அத்துமீறல்: ஒருவர் கைது

கோவை, டிச.22- பள்ளி மாணவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவரை  காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவல கம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் ஜெபராஜ் (39)  ஆட்டோ ஓட்டுநரான இவர், தினந்தோறும் காலை மாணவ,  மாணவிகள் சிலரை பள்ளிக்கு அழைத்துச் செல்வதை பணி யாக கொண்டிருந்தார். 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒரு வரையும் அவர் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார். இந் நிலையில், சனியன்று காலை வழக்கம் போல் அந்த 7 ஆம்  வகுப்பு மாணவியை பள்ளியில் விடுவதற்காக ஆட்டோவில்  அழைத்துச் சென்றார். ஆனால், பள்ளிக்கு அழைத்து செல்லா மல் மாணவியை தனது வீட்டிற்கு அவர் அழைத்துச் சென்றுள் ளார். அங்கு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள் ளார். பள்ளிக்கு தாமதமாகச் சென்ற மாணவியிடம் ஆசிரியர் கள் காரணம் கேட்டுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுநர்  தன்னை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று தவறாக நடக்க  முயன்றதாக கூறினார். உடனே ஆசிரியர்கள் மாணவியின்  பெற்றோருக்கு தகவல் கொடுத்து, அவர்களை பள்ளிக்கு  வரவழைத்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பேரூர் அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல் துறையினர் ஜெபராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் சர்வாதிகார போக்கு

சேலம், டிச.22- ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் சர்வாதிகார  போக்கு, என இந்திய குடியரசு கட்சியின் நிறுவனர் சே.கு.தமிழ ரசன் சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் சேலத்தில் ஞாயிறன்று செய்தி யாளர்களிடம் பேசுகையில், தலித் மக்களின் உணர்வுகளை புண்படுத்திய சம்பவமாக அமித்ஷாவின் பேச்சு உள்ளது. உட னடியாக அவர் மன்னிப்பு கேட்டு, பதவி விலக வேண்டும். தமிழ கத்தில் அம்பேத்கர் சிலைகளுக்கு கூண்டு அமைக்கப்பட்டுள் ளது. இது அம்பேத்கரை சிறையில் வைத்ததற்கு சமம். எனவே, அம்பேத்கர் சிலைக்கு போடப்பட்டுள்ள கூண்டுகளை அகற்ற  வேண்டும். உள்ளாட்சித் தேர்தல்களில் ஊராட்சித் தலைவர்  முதல் மாநகராட்சி மேயர் வரை இட ஒதுக்கீடு தேவை. ஒரே  நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. மோடி  தலைமையிலான ஒன்றிய அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த நினைப்பது சரியான நடைமுறை அல்ல. பாஜகவை முன்னுக்கு நிறுத்தி அதிபராக்க நினைக் கும் எண்ணத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு இத்திட்டத்தை  நடைமுறைப்படுத்த துடிக்கிறது. இது பாஜகவின் சர்வாதி கார போக்கிற்கு உதாரணமாகும், என்றார்.

அணைகள் நிலவரம் ( ஞாயிற்றுக்கிழமை)

மேட்டூர் அணை 
நீர்மட்டம்:119.22/120அடி
நீர்வரத்து:2938கனஅடி
நீர்திறப்பு:800கனஅடி
சோலையார் அணை
நீர்மட்டம்:137.03/160அடி
நீர்வரத்து:43.39கனஅடி
நீர்திறப்பு:408.78கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:67.16/72 அடி
நீர்வரத்து:682கனஅடி
நீர்திறப்பு:992கனஅடி
ஆழியார் அணை
நீர்மட்டம்:119/120அடி
நீர்வரத்து:281கனஅடி
நீர்திறப்பு:403கனஅடி
திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:52.37/60அடி 
நீர்வரத்து:940கனஅடி
நீர்திறப்பு:988கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 89/90அடி
நீர்வரத்து:689கனஅடி
நீர்திறப்பு:763கனஅடி