districts

ஜவஹர்நகர், ஜிகேஎம் காலனி மிதக்க காரணமான வண்ணான் குட்டை ஆக்கிரமிப்பை அகற்றுக

சென்னை,டிச.2- கொளத்தூர் 67ஆவது வட்டத்திற்குட்பட்ட ஜி கே எம் காலனி பகுதியில் உள்ள வண்ணான்குட்டை நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொளத்தூர் பகுதி குழு வலியுறுத்தியுள்ளது.     கொளத்தூர் பகுதிக்குட்பட்ட பல பகுதிகள்  நீர்த்தேக்கப் பகுதிகளாக இருந்து குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டு சென்னை பெருநகர விரிவாக்கம் செய்யப்பட்டது.   குறிப்பாக பெரியார் நகர், ஜவஹர் நகர், பட்டுமேடு,அகரம் உள்ளடக்கிய ஜி கே எம் காலனி பகுதிகள் பெரும் நீர் தேக்க பகுதிகளாக இருந்தது. அவைகளைக் குடியிருப்புகளாக உருவாக்கும் போது நீர்ப்பிடிப்பு பகுதிகளான முத்துமாரியம்மன் குளம் மற்றும் வண்ணார் குட்டை போன்றவைகளைப் பாதுகாக்கத் திட்டமிடாமல்  நகரமைப்பு உருவாக்கப்பட்டது. அதோடு மட்டுமின்றி மாநக ராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் விட்ட காரணத்தால் முதலமைச்சர் தொகுதி என்ற அச்ச உணர்வு கொஞ்சமும் இன்றி அரசு நிலத்தை ஆட்டைய போட பட்டுவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த குற்றச் செயலுக்கு அரசு அதிகாரிகளும் உடந்தை என்று கூறப்படுகிறது. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாத மீதம் இருந்த வண்ணான் குட்டை யின் இன்னொரு பகுதியையும் கைபற்றும் மறைமுகமாக நடை பெற்று வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறைக்கு மனு கொடுத்தும், துண்டுப் பிரசுரம் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லியும் இயக்கங்களை நடத்தி வருகிறது.

குறிப்பாக வண்ணார் குட்டையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்த அந்த கும்பல்  திட்டமிட்டே கொரோனா காலத்தை பயன்படுத்தி நீர்நிலையை சுற்றி சுவர் எழுப்பியும் தடுப்புகளை வைத்து மறைத்து விட்டது. மழைநீர் வரும் கால்வாய் மற்றும் போகும் கால்வாய்களை அடைத்தும் குட்டையை கட்டிட கழிவுகளை கொட்டி  நிரப்பிவிட்டனர். இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து  போராடி வருகிறது.

அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளது. முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் கட்சியின் கொளத்தூர்  பகுதி செயலாளர் பா.ஹேமாவதி மனு அளித்துள்ளார். தற்போது பெய்து வரும் கனமழையால் மற்றும் மேல் பகுதியிலிருந்து வரும் மழைநீர் வடிந்து செல்ல போதுமான மழைநீர் கால்வாய்கள் இல்லாததால் ஜிகேஎம் காலனி பெரியார் நகர், ஜவஹர் நகர் மற்றும் பல பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.   ஆகவே ஆக்கிரமிப்பு பகுதியை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் . நீர்நிலையை மீட்டெடுக்க வேண்டும். மீட்ட குட்டைகள் தூர்வாரப்பட்டு நீர் வளங்கள் பாதுகாக்கப் பட வேண்டும்.       மீண்டும்  மழைநீரால் இப்பகுதி பாதிப்புக்குள்ளாகாதா வகையில் மழைநீர் வடிகால்வாய்களை தரப்படுத்த வேண்டும். வண்ணாங்குட்டையைத் தூர்வாரி நீர்வளப் பகுதியாக மாற்றி சென்னை மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டும் வகையில் மீன் வளர்ப்புக்கு பயன்படுத்திட வேண்டும். மழைநீர் வடிகால்வாய் அமைத்து இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனவும்.  கடந்த 30 ஆண்டுக்கு முன் இருந்த மக்கள் தொகையை கணக்கில் கொண்டு  3 அடி விட்டம் கழிவு  நீர் குழாய் போடப்பட்டது.  தற்போது பல மடங்கு மக்கள் தொகை பெருகி  ஜம்புலிங்கம் மெயின் ரோடு,  ஜி கே எம் காலனியில் 43 தெருக்களில் குடியிருப்புகள் அதிகரித்துள்ள தால், ஜி கே எம் காலனிக்கு என்று கழிவு நீர் நீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.