districts

சென்னை முக்கிய செய்திகள்

ரேசன் கார்டு குறைதீர் முகாம்

காஞ்சிபுரம், டிச. 12: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் சனிக்கிழமையன்று (டிச. 13) காலை 10 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இந்த முகாம்கள் காஞ்சிபுரம் வட்டத்தில் சிங்காடிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் மானாம்பதி, வாலாஜாபாத் வட்டத்தில் ஊத்துக்காடு, திருப்பெரும்புதூர் வட்டத்தில் காட்ராம்பாக்கம், குன்றத்தூர் வட்டத்தில் வளையகரணை ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளன. மேற்கண்ட கிராமங்களில் வசித்துவரும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு அல்லது மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். பெறப்படும் மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள் விடுபட்டிருப்பின், அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்குச் சென்ற  சிறுமி மாயம்

திருப்பத்தூர், டிச. 13- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாபுவின் 8 வயது மகள் தனஸ்ரீ பள்ளிக்குச் சென்றவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. காலை 10 மணிக்குப் பள்ளிக்கு வராததால் பெற்றோர் உமராபாத் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில், சந்தேகத்திற்குரிய சில நபர்களை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்களை உமராபாத் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூனாம்பேடு ஊராட்சியைப் பல்வேறு ஊராட்சிகளாகப் பிரிக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை

செங்கல்பட்டு, டிச. 12- செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியம், 22 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சியான சூனாம்பேடு ஊராட்சியைப் பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் அல்லது பல்வேறு தனித்தனி ஊராட்சிகளாகப் பிரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சூனாம்பேடு, சின்னகளக்காடி, ஒத்தி விளாகம், வேளூர், வில்லிப்பாக்கம், சூரக்குப்பம், தோட்டச்சேரி, இல்லீடு, மணப்பாக்கம், புதுக்குடி, புதுப்பட்டு, வெள்ளகொண்டகரம், புதுப்பேட்டை, காவனூர் மற்றும் தலித் பகுதிகள் என 22 கிராமங்களைக் கொண்ட இந்த ஊராட்சியை, மக்கள் தொகை மற்றும் கிராமங்களின் எண்ணிக்கையின் அடிப்படை யில் பிரிக்க வேண்டும் எனப் பல ஆண்டு களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், சூனாம்பேடு ஊராட்சியை இல்லீடு மற்றும் சூனாம்பேடு எனத் தலா 11 கிராமங்களை உள்ளடக்கி இரண்டு ஊராட்சிகளாகப் பிரிப்பதற்கு மட்டும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பிரிவினை போதுமானதல்ல என்றும், வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு அனைத்துக் கிராமங்களையும் தனித்தனி ஊராட்சிகளாக அறிவிக்க வேண்டும், இல்லையெனில் பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டச் செயலாளர் புரு ஷோத்தமன் கூறுகையில், “ஏற்கெனவே இந்த ஊராட்சியைப் பேரூராட்சியாக அறி விப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்ட நிலையில், தற்போது இரண்டு ஊராட்சிகளாகப் பிரிப்பது என அரசாணை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வெள்ளகொண்டாகரம், புதுப்பட்டு, மணப்பாக்கம் போன்ற கடைக்கோடி கிராமங்களில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதுடன், அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, 22 கிராமங்களையும் தனித்தனி கிராம ஊராட்சிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.