புதுச்சேரி, ஜன.3- பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்திய புதுச்சேரி பாஜக கூட்டணி அரசை கண்டித்து இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் இருசக்கர வாகனத்தை கயிற்றில் கட்டி இழுத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கி ரஸ், பாஜக கூட்டணி அரசு புத்தாண்டு பரிசாக பெட்ரோல், டீசல் மீதான வரியாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. இந்த வரி உயர்வால் அத்தியாவசிய பண்டங்களின் விலை உயர்ந்து வருகிறது. மேலும் பேருந்து கட்டணத்தையும் மாநில அரசு உயர்த்தி வருகிறது. எனவே இந்த வரி உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மாநில என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு உடனடியாக வரி உயர்வை திரும்ப பெறக்கோரி ஜன. 3 ஆம் தேதி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்திற்க வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் கௌசிகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் ஆனந்த் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில செயலாளர் சஞ்சய்சேகரன், பொருளாளர் ரஞ்சித்குமார் மற்றும் இந்திய மாணவர் சங்கம் மாநில செயலாளர் பிரவீன் குமார், நிர்வாகிகள் லீலாவதி, ஜெயராஜ், ஜெயபிரகாஷ், நிலவழகன், வின்னரசன், சத்யா, ஜஸ்டின், அஜித்குமார்,கமலவேலன், தாமோதரன், பாபு, ஸ்டீபன் ராஜ், அரசன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர். பெரியார் சிலையில் இருந்து இரு சக்கர வாகனங்களை கயிறு கட்டி தலைக்கவசம் அணிந்தவாறு இழுத்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.